Friday, September 14, 2012

காலாண்டு தேர்வுகளில் குளறுபடி

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வில், சென்னை மாவட்டத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வினாத்தாள்களை அச்சடித்து வினியோகிக்காததால், காலை 10:15 மணிக்குத் துவங்க வேண்டிய தேர்வு, முற்பகல் 11 மணிக்குத் தான் துவங்கியது.
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியருக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், வழக்கமாக, அந்தந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுவான தேர்வாக நடக்கும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பொதுவாக வினாத்தாளை தயாரித்து அச்சிட்டு, பள்ளிகளுக்கு வழங்குகின்றனர்.புதிய முறைமாணவ, மாணவியர் நலனை கருத்தில்கொண்டு, பொதுத் தேர்வைப் போலவே, இந்த தேர்வுகளையும், மாநில அளவிலான தேர்வாக நடத்த, தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பாட வாரியாக வினாத்தாள் அடங்கிய, "சிடி'க்களை தயாரித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியது. "சிடி'யில் இருந்து, மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அச்சிட்டு வினியோகிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியிருந்தது.
காலாண்டுத் தேர்வுகள் நேற்று துவங்கின. சென்னை மாவட்டத்தில், வினாத்தாளை வினியோகிப்பதற்காக, 20 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை முக்கிய மையமாக்கி, அச்சடிக்கப்பட்ட வினாத்தாள் கட்டுகளை, மொத்தமாக இங்கு வைத்து இருந்தனர். 20 வினியோக மையங்களும், எவ்வளவு வினாத்தாள் தேவையோ, அவற்றை, அசோக் நகர் பள்ளியில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.பள்ளிக்கு ஒன்றுபல வினியோக மையங்களின் பொறுப்பாளர்கள், நேற்று முன்தினமே, அசோக் நகர் பள்ளிக்கு வந்து, வினாத்தாளை பெற்றுச் சென்றனர். 10க்கும் மேற்பட்ட மையங்களின் பொறுப்பாளர்கள், தாமதமாக நேற்று காலை தான் வினாத்தாள் பெறச் சென்றனர். அப்போது வினாத்தாள்கள் தேவையான எண்ணிக்கையில் இல்லாதது தெரியவந்தது. இதனால், ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு வினாத்தாளை வழங்கி, அதை, "நகல்' எடுத்து, மாணவ, மாணவியருக்கு வழங்குமாறு, அலுவலர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு, ஆசிரியர்கள் திடுக்கிட்டனர்.
அயனாவரம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, வினாத்தாள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மாணவ, மாணவியரும் தவித்தனர். அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கிய பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, தலா ஒரு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதை, நகல் எடுத்து, மாணவர்களுக்கு வினியோகிப்பதற்குள், 11 மணி ஆனது. இதனால், பிற்பகலில் நடந்த, இதர வகுப்புகளுக்கான தேர்வுகளும் பாதிக்கப்பட்டன.

அயனாவரம் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கூறியதாவது:
அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு, வினாத்தாள் வினியோக மையமாக, சிட்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தின் சார்பில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, வினாத்தாள் வினியோகிக்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
கூட்டம்
எங்கள் பள்ளியில், 150 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். காலையில், வினியோக மையத்திற்கு சென்று கேட்டபோது, மொழித்தாள் தேர்வுக்கான ஒரே ஒரு வினாத்தாளை மட்டும் வழங்கி, நகல் எடுத்து, மாணவர்களுக்கு வழங்குமாறு கூறினர்.இதேபோல், பல பள்ளிகளுக்கும் கூறப்பட்டதால், நகல் எடுக்கும் கடைகளில் கூட்டம் அதிகரித்தது. 200, 300 பிரதிகளை நகல் எடுத்து, வினியோகிப்பதற்குள், 11 மணி ஆகிவிட்டது. சிறுபான்மை மொழிப்பாட தேர்வுகளுக்கு, ஒரு வினாத்தாள் கூட வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் செய்த மிகப்பெரும் குளறுபடியால், தேவையில்லாமல், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் தவிப்பிற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.]
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரி மழுப்பல்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவா தமிழ்மணியிடம் கேட்டதற்கு, ""நாங்கள் கொடுத்த, "ஆர்டர்' அளவிற்கு, வினாத்தாள் அச்சிடப்படவில்லை. புதிய அச்சகம் என்பதால், அவர்கள் குழம்பிவிட்டனர். இதனால் தான் பிரச்னை ஏற்பட்டது. அடுத்து நடக்கும் தேர்வுகளில், எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment