Thursday, September 6, 2012

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் காலாண்டு தேர்வு துவக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் ஆகியவற்றில் இதுவரை பொதுத்தேர்வு மட்டுமே ஒரே நாளில் ஒரே வித வினாத்தாளுடன் நடைபெற்று வந்தது. காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் முடிவுபடிதான் இதுவரை தேர்வுகள் நடந்துவந்தன. 
ஆனால் பல தனியார் பள்ளிகளில் 9-வது வகுப்பில் உள்ள பாடங்கள் முழுவதையும் நடத்தாமல் டிசம்பர் மாதம் முதல் 10-வது வகுப்பு பாடத்தை நடத்திவந்தனர். அதுபோல 11 -வது வகுப்பு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய பாடங்களை முழுமையாக நடத்தாமல் பிளஸ்-2 பாடங்களை டிசம்பர் மாதம் முதல் நடத்தி வந்தனர்.
இந்நிலை மாறவேண்டும். எல்லா வகுப்பு பாடங்களையும் மாணவர்கள் படித்தால்தான் அவர்களுக்கு அறிவு விருத்தியாகும் என்று கருதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி, முதன்மை செயலாளர் த.சபிதா ஆகியோர்
 தமிழ்நாடு உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் ஒரே வித வினாத்தாளுடன் தேர்வு நடத்த முடிவு செய்தனர். அதன்படி தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு வினாத்தாளும் அச்சடிக்கப்பட்டு தேர்வுத்துறை மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி  முதல் முதலாக, ஒரே நாளில் ஒரே வித கேள்வித்தாள் வழங்கப்பட உள்ளது.
காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுகள் முடிந்ததும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறை அதிகாரிகளும் ஆங்காங்கே சென்று விடைத்தாள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment