Wednesday, September 19, 2012

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் மாற்றுப்பணி மூலம் நிரப்ப உத்தரவு

சேலம்: பள்ளிகளில் கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்டாதவாறு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, மாற்றுப்பணி மூலம் நிரப்புமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகள் என, மொத்தம், 319 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 2012 - 13ம் கல்வியாண்டில், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என, கலெக்டர் மகரபூஷணம் அறிவுரை வழங்கினார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், மாணவர்கள் வருகையை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை, மாணவர்களுக்கு கிடைத்திட செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தேவையின்றி விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தி, அதன் தொடர்ச்சியாக, சிறு, குறுந்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயர்த்தும் பொருட்டு, பயிற்சி அளிக்க வேண்டும். பெற்றோர் சந்திப்பை நடத்தி, மாணவர்களின் கல்வித்தரம் பற்றி தெரிவிக்க வேண்டும்.

காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும், மாற்றுப்பணி மூலம் நிரப்பி பள்ளிகளில் கற்பித்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். ஆசிரியர் பணி எளிதான பணியாகும். அதை நல்ல முறையில் பயன்படுத்தி, மாணவர்கள் எப்போதும் தங்கள் ஆசிரியர்களை நினைத்திருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment