Wednesday, December 21, 2011

12 ஆயிரம் ஆசிரியர் நியமனப் பணி மார்ச்சில் தொடங்கும்




சென்னை, டிச. 20: புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதற்கட்டமாக, 12 ஆயிரத்து 420 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவை வழங்கியுள்ளது.அதன்படி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,305 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 6,679 பேரும், விவசாய ஆசிரியர்கள் 25 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் 3,565 பேரும், சிறப்பாசிரியர்கள் 846 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.மொத்தம் 12,420 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த நியமனங்கள் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
 கடந்த ஆண்டுக்கான சட்டக் கல்லூரி விரிவுரையாளர் நியமனம் உள்ளிட்ட பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும்.
 அதன்பிறகு, புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் தொடங்கும். இப்போது 12,420 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணையும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் எழுத்துத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் வரவேற்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு பதிவு மூப்புப் பட்டியல் மார்ச் மாதத்தில் கோரப்படும்.சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே போட்டித் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த தகுதித் தேர்வை மே முதல் வாரத்திலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஜூன் மாதத்திலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  மாவட்ட அளவிலான 16,548 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நியமனம் உள்ளிட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment