Sunday, December 25, 2011

வெறும் மிரட்டல் கிடையாது; பள்ளிகள் இழுத்து மூடப்படும்

அங்கீகாரம் இல்லாத நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப் பட்டிருப்பது, வெறும் மிரட்டல் கிடையாது; அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாவிட்டால், சம்பந்தபட்ட பள்ளிகள் இழுத்து மூடப்படும் என, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தினர், ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும், தமிழக அரசின் அங்கீகாரம் இல்லாமல், 752 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இயங்கி வருவதாக, தொடக்க கல்வித்துறை அடையாளம் கண்டுள்ளது. அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்கு, தமிழக அரசு ஏற்கனவே வழங்கிய கால அவகாசம், கடந்த ஜூனில் முடிவடைந்த நிலையில், இந்தப் பள்ளிகளுக்கு தற்போது, "நோட்டீஸ்' அனுப்பப் பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு நோட்டீஸ்:தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிகள் இருந்தால், 6 கிரவுண்டு இடமும், மாவட்ட தலைநகரப் பகுதிகள் என்றால், 8 கிரவுண்டு இடமும் இருக்க வேண்டும். நகராட்சிப் பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு இடமும், நகரப் பகுதிகளாக இருந்தால், 1 ஏக்கர் மற்றும் கிராமப் பகுதியாக இருந்தால், 3 ஏக்கரும் இடம் இருக்க வேண்டும் என, தமிழக அரசு கூறியுள்ளது.

நகரம் மற்றும் நகரங்களைச் சார்ந்த பகுதிகளில் இயங்கும் பள்ளிகள், அரசு தெரிவித்துள்ளபடி இடங்களை வாங்க, திணறி வருகின்றன. இதனால், அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. இதற்கிடையே, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்ய, கடந்த ஜூன் வரை கால அவகாசம் தரப்பட்டது. எனினும், விதிமுறைகளை பள்ளிகள் பூர்த்தி செய்யாததால், 752 நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு, தொடக்க கல்வித்துறை,"நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

கடும் நடவடிக்கை:இதுகுறித்து, துறை அதிகாரிகள் வட்டாரத்தினர் கூறும்போது, ""நோட்டீஸ் அனுப்புவது, ஒரு வழக்கமான நடவடிக்கை என, தற்போது பள்ளிகள் நினைக்கக் கூடாது. இந்த முறை, கடுமையாக நடவடிக்கை எடுப்போம். அரசு விதிமுறைகளை பூர்த்திசெய்வது குறித்து, 15 நாட்களில் உறுதிமொழி அளிக்க வேண்டும்.உரிய பதிலை அளிக்காவிட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளை இழுத்து மூடுவோம். இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றி விடுவோம்,'' என்றனர்.

நிலம் விலை அதிகம்:தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ் இதுகுறித்து கூறியதாவது:
மாநகராட்சி பகுதியிலும், நன்கு வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளிலும், கூடுதல் நிலம் வாங்க முடியாத அளவிற்கு, நிலத்தின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால், அரசின் விதிமுறையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, 1,000 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன.
தேவைக்கு அதிகமான வசதிகளையும், இடங்களையும் கொண்டிருந்தால் மட்டுமே, அங்கீகாரம் வழங்கப்படும் என்ற நிலை உள்ளது. நிலப்பரப்பை வைத்து கல்வித்தரம் அமைவதில்லை. படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல், வசதிகள் இருந்தால் போதும் என்ற அளவில், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கிறிஸ்துதாஸ் கூறினார்.

No comments:

Post a Comment