Saturday, December 10, 2011

தேர்வு மூலம் தான் ஆசிரியர்கள் தேர்வு

சென்னை:தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், போட்டித் தேர்வு மூலம் தான் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்தார்.நடப்பு கல்வியாண்டில், 710 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதன் மூலம், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள்; தொடக்க கல்வித் துறையில், 1,581 பேர்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 1,282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 6,608 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் முறை, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் ஸ்ரீதரிடம் நேற்று கேட்டபோது, அவர் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட அரசாணையின்படி, இனிமேல் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களும், தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர்.ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதலில் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஆனால், தற்போது அதற்கு கால அவகாசம் இல்லாததால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், நேரடியாக போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். அதன்பின், அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதுவர்.இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார்.

அரசாணை வெளியீடு:இதற்கிடையே, 65 தொடக்கப் பள்ளிகளை, நடப்பு கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், இதற்கு, 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தும், தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment