Friday, December 16, 2011

தகுதி தேர்வுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்


சென்னை, டிச.13-

ஆசிரியர் தகுதி தேர்வு


தற்போது கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பணிக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு என்ற தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேரலாம். இந்த தகுதி தேர்வை மத்திய செகண்டரி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.
தமிழ்நாட்டில் இலவச கட்டாய கல்வி சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மத்திய அரசு பள்ளிகளைப் போன்று மாநில அரசு பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
என்.சி.டி.இ. கல்வித்தரம்
மத்திய அரசு பள்ளிகளைப் பொறுத்தவரையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கும், பட்டதாரி ஆசிரியர் பதவிக்கும் தனித்தனியே தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. தகுதி தேர்வுக்கென்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) குறிப்பிட்ட தரத்தில் பாடத்திட்டத்தை வடிவமைத்து இருக்கிறது. அதையொட்டித்தான் இந்த தகுதி தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அறிவியல் பிரிவு, சமூக அறிவியல் பிரிவு என தனித்தனியே பாடத்திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. மொழிப் பாடத்திற்கு தனி பாடத்திட்டம் இல்லை. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில் (2011-2012) அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கிலான இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
பாடத்திட்டம் தயாரிப்பு
இந்த நிலையில், என்.சி.டி.இ. வரையறை செய்துள்ள கல்வித்தரத்தின்படி, தகுதி தேர்வுக்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வைப் போல் அல்லாமல் அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளுடன் சேர்த்து தமிழ், ஆங்கிலம் மொழி பாட ஆசிரியர்களுக்காகவும் கூடுதலாக ஒரு தகுதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது நடத்தப்பட இருப்பது முதல் தகுதி தேர்வு என்பதால், பாடங்களில் சராசரி அறிவு பெற்றவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலேயே பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தகுதி தேர்வு மற்றும் போட்டித்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதுதான் தாமதம். இரண்டு தேர்வுகளுக்காகவும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் பயிற்சியை தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment