Saturday, December 17, 2011

வேலைக்கு காத்திருக்கும் இளநிலை ஆசிரியர்கள் !

புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த ஆயிரக்கணக்கானோர் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வேலை எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர்.தமிழகத்தில கடந்த 1995-க்கு முன்னர் தொடங்கப்பட்ட முன் முன்பருவ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (pre-primary teacher training institute), முன் ஆதார ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (pre-basic teacher training institute) ஆகியவற்றிலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமும் 2 ஆண்டுகள் பயிற்சி முடித்தவர்களுக்கு "டிப்ளமோ இன் பிரீ பிரைமரி டீச்சர்' என்ற பட்டயச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை இந்தப் பட்டயச் சான்றிதழ் பெற்றவர்கள் 18,600 பேர்.
இந்தப் பயிற்சி முடித்தவர்கள் தொடக்கப் பள்ளிகளில் 1, 2-ம் வகுப்புகளில் மட்டுமே இளநிலை ஆசிரியராக நியமனம் செய்யத் தகுதியுடையவர்கள். ஆனால், காலப்போக்கில் பள்ளிகளில் இளநிலை ஆசிரியர் பணியிடங்கள் அறவே நீக்கப்பட்டதால், இந்தப் பயிற்சி முடித்தவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.தவிர, பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை மாவட்ட வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதற்கான கல்வித் தகுதி, நியமன முறை போன்ற நிலைகளில் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, நர்சரி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களை 1, 2-ம் வகுப்புகளில் நியமனம் செய்யக் கூடாது என்று 1996-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், எதிர்காலமே இல்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
இதனிடையே, இந்தப் பயிற்சி முடித்த கீதாமணி உள்ளிட்ட 72 பேர், வேலை கோரி தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் ஆரம்பப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். இதை முன்னுதாரணமாகக் கொண்டு இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த பலரும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், பலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.இதனிடையே, "அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பயிற்சி முடித்து, அரசுத் தேர்வு இயக்ககம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் அளித்த பிறகு, அவர்கள் ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியற்றவர்கள் எனக் கூறுவதை ஏற்க இயலாது. இந்தச் செயல் பொதுவான நீதிக்கு எதிர்மாறானது. எனவே, இதுதொடர்பாக மனிதாபிமானத்துடன் அரசு ஆராய வேண்டும்' என்று தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
மேலும், 1995-ல் தொடங்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், "இது போன்ற பயிற்சி பெற்றவர்களை 4- 6 வயதிலான சிறார்களுக்கு பயிற்றுவிக்க ஆசிரியர்களாக நியமிக்கலாம்' என்று கருத்து தெரிவித்தது. ஆனால், அதற்கான நிரந்தர அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படாததால், பயிற்சி முடித்த ஆயிரக்கணக்கானோர் இன்னமும் வேலைக்கு காத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக தொடக்கப் பள்ளி இளநிலை ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ். வசந்த மீனா கூறியது: கடந்த 2003-ல் இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் 6-க்கு 4 என்ற விகிதத்தில் நியமனம் செய்யலாம் என்று அரசு தொடக்கக் கல்வி இயக்ககம் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து 2006-ல் தமிழகம் முழுவதும் சுமார் 500 பேர் வேலை பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.ஆனால், அந்த அரசாணை புதுப்பிக்கப்படாமல் போனதால், ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவிக்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விரைவில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங்களில் இளநிலை பயிற்சி முடித்த சுமார் 6 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றார்.
இதுதொடர்பாக புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது: அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சுமார் 18 ஆயிரம் பேருக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் கிராமங்கள்தோறும் மழலையர், தொடக்கப் பள்ளிகள் தொடங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அதை விரைவாகச் செயல்படுத்தினால், இவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment