Friday, December 9, 2011

முதல் நாள் அறிவிப்பு; இரண்டாம் நாள் அரசாணை வெளியீடு


சென்னை:பள்ளிக் கல்வித் துறையில், புதிய ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கான அரசாணை, இரண்டாவது நாளான நேற்றே வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 710 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல், இதற்காக 3,550 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்தல், ஒரு பள்ளிக்கு ஒரு ஆய்வக உதவியாளர் வீதம் 710 பணியிடங்களை ஏற்படுத்துதல், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் 2009ல் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட, 831 பள்ளிகளில், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங் களாக தரம் உயர்த்துதல், இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகளை, நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அறிவிப்பு வெளியான இரண்டாம் நாளான நேற்று, முதல்வர் அறிவிப்பிற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பான இரு அரசாணைகளுக்கும், முதல்வர் அறிவிப்பு வெளியான அதே தேதியில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு இணையதளத்தில் நேற்றிரவு தான் வெளியிடப்பட்டன.

அரசாணைகளில், பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் கூறியிருப்பதாவது:
* அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசு நிதி பங்களிப்புடன், நடப்பு கல்வியாண்டில், 710 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். ஒரு பள்ளிக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் வீதம், 3,550 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
* ஒரு பள்ளிக்கு ஒரு ஆய்வக உதவியாளர் மற்றும் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடங்கள் வீதம், 710 ஆய்வக உதவியாளர் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
* இளநிலை உதவியாளர் பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடி நியமனம் வாயிலாக நிரப்பப்படும். டி.என்.பி.எஸ்.சி., மூலம் உடனடியாக நிரப்ப முடியாத பட்சத்தில், தற்காலிக அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவ லர்கள் மூலம், வேலை வாய்ப்பகத்தில் பணி நாடுனர் பட்டியல் பெற்று, நடப்பு நிதியாண்டிலேயே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், பள்ளிக் கல்வித் துறையில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு, பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம், நடப்பு நிதியாண்டிலேயே நிரப்பப்படும்.
* தரம் உயர்த்தப்படும் 710 உயர்நிலைப்பள்ளிகளுக்கு, 710 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது.
* 3,550 பட்டதாரி ஆசிரியர்களை, நடைமுறையில் உள்ள விதிகளின்படி நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது.
* 831 தொடக்கப்பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.

ஆசிரியர் நியமனத்தில் மீண்டும் குழப்பம்:"தற்போதைய நிலையில், இடைநிலை ஆசிரியர்களைத் தவிர, மற்ற ஆசிரியர்கள் அனைவரும், ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்கனவே அறிவித்துள்ளார். இவரின் பேட்டி, 1ம் தேதி விரிவாக தினமலர் நாளிதழில் வெளியானது.இந்நிலையில், "3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், நடைமுறையில் உள்ள விதிகளின்படி உடனடியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தப்படுகிறார்' என, அரசாணையின் பக்கம் 4ல் கூறப்பட்டுள்ளது.

"நடைமுறையில் உள்ள விதிகளின்படி' என்பதை தெளிவுபடுத்தவில்லை.எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வா அல்லது பதிவுமூப்பு அடிப்படையிலான தேர்வா என்பது, அரசாணையில் தெளிவாக கூறவில்லை. அமைச்சர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ள நிலையில், நேற்று வெளியான அரசாணை மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment