Thursday, December 8, 2011

அங்கு "ஸ்மார்ட் கிளாஸ்'; இங்கு "டீச்சிங் எய்ட்ஸ்'


கோவை: கோவை பள்ளிகளில் கற்றல் உபகரணங்களின் உதவியால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறமையை, சிங்கப்பூரில் "ஸ்மார்ட் கிளாஸ்' தொழில் நுட்ப உத்தியுடன் ஒப்பிட்டு அந்நாட்டு தமிழ் ஆசிரியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களை விட சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் உண்மையான ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களாக உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் அங்கு நிரந்தரமாக வசித்து வருவதால், சிங்கப்பூரில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் இலக்கணத்தை எளிமையாக கற்றுக் கொடுக்கவும், அவர்களை தமிழில் ஆர்வம் மிக்கவர்களாக மாற்றவும் அங்குள்ள தமிழ் ஆசிரியர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 13 தமிழ் ஆசிரியர்கள் அடங்கிய குழுவை சிங்கப்பூர் அரசு கோவைக்கு அனுப்பி வைத்துள்ளது.

முதல் கட்டமாக பாரதியார் பல்கலையில் ஆசிரியர்களுக்கு ஆழ்நிலை பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் பின், கோவையில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு சென்று தமிழ் கற்பிக்கும் முறை குறித்து இக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 
சொக்கம்புதூர் எஸ்.பி. ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று காலை "விசிட்' செய்த சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் குழுவினருக்கு பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் கீதா, உதவி முதல்வர் கிறிஸ்டோபர் தனபால், தமிழ் துறைத் தலைவர் விசாலாட்சி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றனர். இப்பள்ளி குழந்தைகளில் சிலர் பாரதியார், அவ்வையார், திருவள்ளுவர் போல் வேடமிட்டு சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்களுக்கு அளித்த வரவேற்பு, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.இதன்பின், இரண்டிரண்டு பேராக பிரிந்த சிங்கப்பூர் ஆசிரியர்கள், ஆறு வகுப்பறைகளில் தமிழ் கற்பிக்கும் முறையை உற்றுக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டனர். தமிழ் கற்பித்தல் குறித்து எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியின் தமிழ் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.

தமிழ் மொழியை எளிமையாக கற்பிப்பது குறித்தும், ஆரம்ப, நடுநிலை, உயர் வகுப்புகளில் தமிழை எளிமையாக கற்றுத்தரும் உத்திகள், நுணுக்கங்கள் குறித்தும் பள்ளியின் தமிழ் துறைத் தலைவர் விசாலாட்சி விளக்கினார். தமிழ் இலக்கணத்தை பாடல், கதைகள் வாயிலாக கற்பித்தால் எளிதில் மாணவர்கள் மனதில் பதியும் என்று விசாலாட்சி தெரிவித்தார். சிங்கப்பூர் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைச் சூழலையும் தமிழகத்தின் சாதாரண வகுப்பறைச் சூழலையும் ஒப்பிட்டு ஆசிரியர்கள் கலந்துரையாடினர். 
ஆரம்பப்பள்ளி பாடங்களை, அதற்கான கற்றல் உபகரணங்களை (டீச்சிங் எய்ட்ஸ்) வகுப்பறையில் நிஜமாகவே காண்பித்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்களின் திறமையை பாராட்டினர். பள்ளி அரங்கில் நடைபெற்ற குழந்தைகளின் கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்த சிங்கப்பூர் ஆசிரியர்கள், மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றனர்.

No comments:

Post a Comment