Friday, December 2, 2011

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள், விறுவிறுப்பாகத் துவங்கியுள்ளன. தகுதிவாய்ந்த அனைவரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்குப் பின், நேர்முகத் தேர்வு நடத்தி, ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், நியமனக் கடிதங்கள் அனுப்ப உள்ளன.


தொடக்கக் கல்வித் துறையில், பகுதி நேர பணியாக, 5,253 ஓவிய ஆசிரியர்கள், 5,392 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5,904 கைவினை மற்றும் தையல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் உள்ள, 16,549 பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தேர்வுப் பணிகளை நிறைவேற்ற, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



* பணி நியமனம் குறித்த விளம்பரம், மாவட்டந்தோறும், 1ம் தேதியில் இருந்து, 10ம் தேதி வரை வெளியிட்டு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பெயர் பட்டியல் பெறப்படும்.

* தகுதியானவர்களிடம் இருந்து, 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட குழுவினரால், விண்ணப்பங்கள் பெறப்படும்.


* விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, 16 முதல் 18ம் தேதி வரை நடைபெறும். 



19ம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள், பணி நாடுனர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பப்படும்.

* நேர்முகத் தேர்வு மற்றும் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள், 26ம் தேதி துவங்கி, ஜன., 15ம் தேதி வரை, 21 நாட்கள் நடைபெறும்.


* ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அனுப்பப்படும். ஜன., 27ம் தேதிக்குள், 16 ஆயிரத்து 549 பேரும் பணியில் சேர வேண்டும்.இது தொடர்பான இறுதி அறிக்கைகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்குனருக்கு, ஜன., 30ம் தேதிக்குள், அனைத்து அலுவலர்களும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.








அடுத்த வாரம் தொடங்கும்: தமிழகம் முழுவதும் 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 19 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் தங்களுக்குரிய மாவட்டங்களில் திங்கள்கிழமைக்குள் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுதிநேர ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகள் டிசம்பர் 4 அல்லது 5 தேதிகளில் தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் தேர்வு
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், பகுதி நேர ஆசிரியர் தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உறுப்பினர், செயலராக இருப்பார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற் கல்வி நிபுணர், மாவட்ட அளவிலான கலைப்படிப்புகளில் நிபுணர், இசை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் படிப்புகள் உள்ளிட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்தத் துறை நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், இடைநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரிகளாக இருப்பார்கள். தாற்காலிகமாக பணியமர்த்தப்படும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment