Saturday, December 3, 2011

ஆசிரியர் நியமனத்திற்கு போட்டித் தேர்வு கூடாது


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்:-


தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அனைவரும் போட்டித் தேர்வின் மூலமாகவே பணியமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு தகுதி தேர்வையும் எழுதவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு சமூகநீதிக்கு எதிரானது. இப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009ன் படி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித் தேர்வு என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கபில்சிபல் ஆவார். கபில்சிபல் முழுக்க முழுக்க சமூக நீதிக்கு எதிரானவர். கிராமப்புறங்களைச் சேர்ந்த அடித்தட்டு பட்டதாரிகள் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் இப்படி ஒரு முறையை அவர் அறிமுகம் செய்துள்ளார்.

பதிவு மூப்பு அடிப்படையில்:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த ஜுன் மாத நிலவரப்படி 2,81,000 பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 5,76,000 பேர் ஆசிரியர் பணிக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டால் 50 வயதை கடந்துவிட்ட தங்களுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் பலர் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தமிழக அரசின் புதிய உத்தரவு அவர்களின் நம்பிக்கையை சிதைத்திருக்கிறது.


போட்டித் தேர்வுகளை நடத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். எனவே ஏழை மற்றும் கிராமப்புற பட்டதாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வையும் போட்டித் தேர்வையும் நடத்தும் முடிவை கைவிடவேண்டும். ஏற்கெனவே இருந்தவாறு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்யவேண்டும்.



இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


மாஜி அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு:
 "ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படாமல், தேர்வு மூலம் நியமிக்கப்படுவர்' என, தமிழக அரசு அறிவித்திருப்பது, முறைகேடுக்கு வழிவகுக்கும் என, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழக அரசை கண்டித்து, காஞ்சிபுரத்தில், தி.மு.க., சார்பில், கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது: 

இனிமேல், பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடைபெறாது என அறிவித்துள்ளனர். ஆசிரியர் படிப்பு முடித்துவிட்டு, வேலை கிடைக்கும் எனக் காத்திருந்தவர்களுக்கு, வேலை கிடைப்பது சிரமம்.
டி.என்.பி.சி., தேர்வில் நடந்தவற்றை தெரிந்த பின்பும், டி.ஆர்.பி., தேர்வு மூலம், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு பதிலாக, 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு வேலை, என்று கூட அறிவிக்கலாம். சிரமப்பட்டு படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல.
இவ்வாறு, பொன்முடி பேசினார்.



No comments:

Post a Comment